செய்திகள்

தூத்துக்குடியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குடும்பத்திற்கு தொல்லை தரக்கூடாது - ஐகோர்ட்

Published On 2018-06-01 08:09 GMT   |   Update On 2018-06-01 08:09 GMT
தூத்துக்குடி போராட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தொல்லை தரக்கூடாது என போலீசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Thoothukudifiring #MaduraiHC
மதுரை:

நெல்லை மாவட்ட மக்கள் அதிகார அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கடந்த 22-ந் தேதி போராட்டம் நடந்தது. இதில் துப்பாக்கிச்சூடு நடந்ததில் 13 பேர் பலியானார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏராளமானோர் கைதாகி உள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தை விசாரணை என்ற பெயரில் போலீசார் தொந்தரவு செய்து வருகின்றனர். இது சட்ட விரோதமானது.


போலீசாரின் இந்த தொந்தரவு காரணமாக அந்த குடும்பத்தினர் மன உளைச்சலில் உள்ளனர். எனவே குற்றம் சாட்டப்பட்டோரின் குடும்பத்தினரை காவல்துறையினர் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும்.

மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

அந்த மனு இன்று நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர்கள் ஸ்டெர்லைட் தொடர்பான போராட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டோரின் குடும்பத்திற்கு காவல் துறையினர் தொல்லை தரக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். #Thoothukudifiring #MaduraiHC
Tags:    

Similar News