செய்திகள்
கொள்ளை நடந்த வீடு

ஈரோட்டில் 2 வீடுகளில் 37 பவுன் நகை -பணம் கொள்ளை

Published On 2018-05-30 07:44 GMT   |   Update On 2018-05-30 07:44 GMT
ஈரோட்டில் அடுத்தடுத்து 2 வீடுகளில் 37 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு அருகே தண்ணீர்பந்தல்பாளையம், கணபதி நகரை சேர்ந்தவர் பிலிப்மேத்யூ(வயது65). ஜவுளி வியாபாரி.

பிலிப்மேத்யூவுக்கு சொந்த ஊர் கேரள மாநிலம் கோட்டயம் ஆகும். ஈரோட்டுக்கு வந்து ஜவுளி வியாபாரம் செய்து இங்கு வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பிலிப் மேத்யூ கேரளாவில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் கேரளா சென்று விட்டார்.

இதற்கிடையே மேத்யூ பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் மேத்யூ வீட்டின் முன் பக்க கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து மேத்யூவுக்கு போனில் தகவல் கொடுத்தார்.

திடுக்கிட்ட மேத்யூ கேரளாவில் இருந்து தண்ணீர்பந்தல் பாளையத்தில் உள்ள வீடுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவை உடைத்து அதில் இருந்த 28 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இதே போன்று அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

தண்ணீர்பந்தல் பாளையம், கணபதி நகரை சேர்ந்தவர் பழனிசாமி. சாயபட்டறை உரிமையாளர். இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். பழனிசாமி திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்துக்காக தனது குடும்பத்துடன் சென்று இருந்தார்.

இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் பழனிசாமி வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 9 பவுன் நகையையும், மகன் கல்வி கட்டணத்திற்காக வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தையும் கொள்ளையர்கள் அள்ளி சென்றனர்.

இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் கைரேகை நிபுணர்களும் தடயங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இரு கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டது ஓரே கும்பலாக இருக்க கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் கொள்ளை நடந்த வீட்டின் அருகே வைக்கபட்டுள்ள சி.சி.டி.வி.கேமிரா பதிவுகளையும் போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள்.

தொடர்ந்து அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த இது துணிகர கொள்ளையால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். நேற்றும் இதேபோல் மொடக்குறிச்சி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது குறிப்பிட்டத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News