செய்திகள்

ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை: ஓ.பன்னீர்செல்வத்தை விசாரிக்க ஆணையம் முடிவு

Published On 2018-05-28 05:23 GMT   |   Update On 2018-05-28 05:23 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் ஓ.பன்னீர் செல்வத்தை விசாரிக்க முடிவு செய்துள்ளது- #JayaDeath #Jayalalithaa #OPanneerSelvam
சென்னை:

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பினார்கள்.

இதையடுத்து அதுபற்றி விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது உடன் இருந்தவர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை அந்த ஆணையம் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரித்து வருகிறது. சசிகலா குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


இதற்கிடையே சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன், ஆணையத்தில் ஆஜராகி வாதிட்டு வருகிறார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் தெரிவித்தவர்களிடம் அவர் குறுக்கு விசாரணையும் நடத்தினார்.

இந்த நிலையில், இந்த விசாரணைக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தையும் அழைக்க வேண்டும் என்று வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் கோரிக்கை விடுத்தார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து ஓ.பி.எஸ். நிறைய குற்றச்சாட்டுக்களையும், சந்தேகங்களையும் வலியுறுத்தி கூறி இருப்பதால் அவரை அழைத்து விசாரிக்க வேண்டியது அவசியமாகும் என்று சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.

அவரது கோரிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி ஏற்றுக் கொண்டார். எனவே துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு விரைவில் விசாரணை ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் அளிக்கும் வாக்குமூலம் இந்த விசாரணையில் முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சரி, ஆஜராகி தகவல்கள் தெரிவிக்க தயார் என்று தெரிவித்தனர். #JayaDeath #Jayalalithaa #OPanneerSelvam
Tags:    

Similar News