செய்திகள்

பஸ்சை வழிமறித்து மறியல் செய்த தி.மு.க.வினர் கைது

Published On 2018-05-25 11:52 GMT   |   Update On 2018-05-25 11:52 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து கோவையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.#SterliteProtest
கோவை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இதில் 13 பேர் பலியானார்கள். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

பல்வேறு இடங்களில் மறியலும் நடைபெற்றது.கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் முன் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்கள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பஸ்சை மறித்தனர். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்தும், இதற்கு பொறுப்பு ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும் என அவர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள்.

அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பொங்கலூர் பழனிசாமி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பைந்தமிழ் பாரி, மாவட்ட பொருளாளர் நாச்சி முத்து, தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், கார்த்திக் செல்வராஜ், வக்கீல் மகுடபதி, மயில் வாகனம், முருகவேல், ராஜேந்திர பிரசாத் மற்றும் 4 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் வடகோவை மேம்பாலம் கிராஸ்கட் ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் வீரகோபால், இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், பகுதி செயலாளர்கள் உதயகுமார், புதூர் மணி மற்றும் மூ.ரா. செல்வராஜ், கோவை லோகு மீனா லோகு, சண்முக சுந்தரம், சரஸ்வதி, கண்ணப்பன், கிருஷ்ண மூர்த்தி, உசேன், மனோகர், கேபிள் மணி, தினேஷ், காளிமுத்து, கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.#SterliteProtest
Tags:    

Similar News