செய்திகள்

தூத்துக்குடி கலவரம் - டிஜிபி, உயர் அதிகாரிகளுடன் முதல்வர் அவசர ஆலோசனை

Published On 2018-05-22 09:03 GMT   |   Update On 2018-05-22 09:03 GMT
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததையடுத்து டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை மேற்கொண்டார். #sterliteplant #protest
சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது போலீசார் தடுத்ததால் வன்முறை வெடித்தது. அதனையும் மீறி போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர்  ஒரே சமயத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுழைந்தனர். அவர்களை போலீசார் வெளியேற்ற முயன்றபோது கடும் மோதல் வெடித்தது.



போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதுடன் வாகனங்களையும் அடித்து நொறுக்கி  தீ வைத்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கூட்டத்தை கலைத்தனர். இந்த வன்முறையால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அண்டை மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள், டிஜிபி, உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது ஸ்டெர்லைட் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேசப்பட்டது. மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் இந்த கலவரம் குறித்து டிஜிபி ராஜேந்திரன் கூறுகையில், தூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துவிடட்து. கூடுதல் பாதுகாப்புக்கு மற்ற பகுதிகளில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் டிஜிபி கூறினார்.

தூத்துக்குடியில் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது கண்டனத்திற்குரியது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.  ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். #sterliteplant #protest
Tags:    

Similar News