செய்திகள்

கரூரை குளிர்வித்த கோடை மழை

Published On 2018-05-18 21:50 IST   |   Update On 2018-05-18 21:50:00 IST
கரூரில் நேற்று கோடை மழை கொட்டி தீர்த்தது. இரவில் குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கரூர்:

கரூர் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கோடை வெயில் 106,107 டிகிரி பதிவானது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. தமிழகத்திலேயே கரூரில் அதிகபட்ச வெயில் பதிவாகி வந்ததால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. அக்னி நட்சத்திரம் தொடங்கினால் நிலைமை இன்னும் மோசமாகி விடுமே என பயந்தனர். 

இந்த நிலையில் வாட்டி வதக்கிய கோடை வெப்பத்தை கடந்த இரு வாரங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை தணிய வைத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்பு 4,5 தினங்கள் கனமழை பெய்தது. மேலும் சாரல் மழையும் பெய்து வருகிறது. நேற்று மாலை 6 மணிக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. கரூர் நகர் பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. 1 மணிநேரம் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதில் அதிக பட்சமாக கரூரில் 33 மி.மீட்டர் மழை பதிவானது. அதேபோன்று அரவக்குறிச்சியில் 1.2மி.மீ., அணைப்பாளையத்தில் 7மி.மீ., பாலவிடுதியில் 8.4மிமீ., க.பரமத்தியில் 24.2மி.மீ., மயிலம்பட்டியில் 16 மி.மீட்டர் மழை பதிவானது. 

மழையின் காரணமாக கரூர் வெங்கமேடு, பாலம்மாள்புரம் போன்ற பகுதியில் வெள்ளம் ஆறாக ஓடியது. பாலம்மாள்புரம் ரெயில்வே பாலத்தின் அடியில் வெகுநேரம் வெள்ளம் தேங்கி கிடந்தது. இதனால் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்வபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கனமழையின் காரணமாக இரவில் குளு, குளு சீதோஷ்ண நிலை நிலவியது. குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 
Tags:    

Similar News