செய்திகள்

கோவை - நீலகிரியில் கனமழை கொட்டி தீர்த்தது: சுற்றுலா பயணிகள் ஆனந்தம்

Published On 2018-05-17 12:20 GMT   |   Update On 2018-05-17 12:20 GMT
கோவை மற்றும் நீலகிரியில் நேற்று கனமழை பெய்தது. சுற்றுலா பயணிகள் குடைப்பிடித்தப்படி கண்டு ரசித்தனர்.

கோவை:

கோவையில் கடந்த சில நாட்களாக மாலை, இரவு நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் திடீரென மழை கொட்டியது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 1 மணிநேரம் கொட்டி தீர்த்த இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இரவு நேரத்தில் கடுங்குளிர் நிலவியது.

இதேபோல் ஊட்டியிலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் ஊட்டியில் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்களையும் பார்வையிட்டு வருகிறார்கள்.

ஊட்டியில் நேற்று பகல் நேரத்தில் திடீரென பலத்த மழை கொட்டியது. இதனால் படகுசவாரி போட்டி ரத்து செய்யப்பட்டது. மேலும் பல்வேறு சாலைகளில் மழைவெள்ளம் தேங்கியது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் பெய்த மழையின் காரணமாக சுற்றுலா பயணிகள் குடைப்பிடித்தப் படி கண்டு ரசித்தனர். மேலும் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. சமவெளி பகுதிகளில் வெப்பம் வாட்டி வரும் நிலையில் ஊட்டியில் நிலவிய குளிர்ந்த காற்றை சுற்றுலா பயணிகள் ஆனந்தமான ரசித்தனர். சிலர் உற்சாக மிகுதியில் மழையில் நனைந்தபடி நின்றனர். மழையின் காரணமாக ஊட்டியில் குளுகுளு சீசன் களைகட்டியுள்ளது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் காலை நேரத்தில் இருந்தே அதிகரிக்க தொடங்கியது.

Tags:    

Similar News