செய்திகள்

எடியூரப்பாவை கர்நாடக ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தது ஒருதலைப்பட்சமாகும்- திருமாவளவன்

Published On 2018-05-17 09:57 IST   |   Update On 2018-05-17 09:57:00 IST
கர்நாடக கவர்னர் ஒருதலைபட்சமாக எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்திருப்பது ஜனநாயக குரல் வளையை நெரிக்கும் செயலாகும் என்று திருமாவளவன் குற்றச்சாட்டி உள்ளார்.#KarnatakaElections2018 #Thirumavalavan
சென்னை:

சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகாவில் யாரால் நிலையான ஆட்சி அமைக்க முடியுமோ, எந்த அணியால் நிலையான ஆட்சி அமைக்க முடியுமா அவர்களை அழைக்க வேண்டும் என்பது தான் சட்ட நடைமுறையாகும்.

அந்த வகையில் அதிக எண்ணிக்கையில் உள்ள காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்தை தான் ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும்.

ஆனால் கவர்னர் ஒருதலைபட்சமாக பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்திருப்பது ஜனநாயக குரல் வளையை நெரிக்கும் செயலாகும். இதை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் பதவி ஏற்பை இப்போதைக்கு தடை செய்ய முடியாது என்று கூறினாலும் நாளை நடைபெற உள்ள வழக்கில் அளிக்கப்படுகிற இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்று வழிகாட்டுகிறது. எடியூரப்பா தங்களது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கவர்னரிடம் சமர்ப்பித்து உள்ளார்.



அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கூறப்பட்டுள்ளது. மணிப்பூர், கோவா, மேகாலயா போன்ற 3 மாநிலங்களில் தேர்தல் நடந்தபோது மிகவும் குறைவான இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதாவை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்தார்.

குறிப்பாக மேகலாலயாவில் 2 இடங்களில்தான் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருந்தது. அதை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தார். அங்கே ஒரு நீதி, கர்நாடகாவில் ஒரு நீதி என்பது மத்திய அரசு கவர்னரை தங்களின் எடுபிடிகளாக கைப்பாவைகளாக பயன்படுத்துகிறார்கள் என்பதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம். இது மிகவும் வேதனைக்குரியது.

ஜனநாயகத்தை பாதுகாக்க ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒருங்கே அணி திரள வேண்டிய தேவையை இது உணர்த்துகிறது.

உச்சநீதிமன்றத்தின் நாளைய தீர்ப்பை பொறுத்திருந்து பார்ப்போம். அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சி ஒரு கலாசார பாசிசத்தை தட்டி எழுப்பி வருகிறது. அரசியலிலும் ஒரு கொடுங்கோன்மையை நிலை நாட்டுகிறது. தேசத்துக்கு இது மிகவும் ஆபத்தானது.

இவ்வாறு அவர் கூறினார்.#KarnatakaElections2018 #Thirumavalavan
Tags:    

Similar News