செய்திகள்

ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 8 பவுன் நகை, ரூ.4 லட்சம் கொள்ளை

Published On 2018-05-16 14:16 GMT   |   Update On 2018-05-16 14:16 GMT
தோகைமலை அருகே ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 8 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை கொள்ளையடுத்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தோகைமலை:

தோகைமலை அருகே உள்ள வடசேரி ஊராட்சி காவல்காரன்பட்டியில் உள்ள ஆலத்தூரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை நிமிலா. நேற்று முன்தினம் இரவு வீட்டில் காற்றோட்டத்திற்கா கதவை திறந்து வைத்து விட்டு நிமிலா மற்றும் அவரது கணவர் ரெங்கராஜ், அவரது மருமகள் பிரியா ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நிமிலாவின் மகன் கோபிநாத் புதுவாடியில் உள்ள தங்களது உறவினர் வீட்டு திருவிழாவிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நள்ளிரவில் 4 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து அங்கு தூங்கி கொண்டு இருந்த ஓய்வுப்பெற்ற ஆசிரியை நிமிலா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியையும், அருகில் தூங்கி கொண்டு இருந்த பிரியா கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி சங்கிலியையும் பறித்தனர். இதில் அதிர்ச்சி அடைந்த பிரியா திருடன், திருடன் என்று சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வீட்டில் இருந்து வெளியே வர முற்பட்ட போது அவர்களது வீட்டின் வெளிபுறத்தில் உள்ள கதவின் தாழ்பால் திருடர்களால் ஏற்கனவே சாத்தப்பட்டு இருந்தது. இதனால் அவர்களால் உடனே உதவிக்கு வரமுடியவில்லை. இந்த நிலையில் வீட்டில் இருந்த நிமிலா, ரெங்கராஜ், பிரியா ஆகியோரை மிரட்டி பீரோ சாவியை வாங்கிய திருடர்கள் பீரோவில் இருந்த ரூ.3 லட்சத்து 92 ஆயிரத்தையும் அவர்களின் கண் எதிரோ எடுத்துக்கொண்டு திருடர்கள் தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து நிமிலா தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பிறகு இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்கருப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News