செய்திகள்

எஸ்.வி.சேகரை கைது செய்யாவிட்டால் போராட்டம்- கி.வீரமணி அறிக்கை

Published On 2018-05-15 03:15 GMT   |   Update On 2018-05-15 03:15 GMT
போலீசாருக்கே சவால் விடும் எஸ்.வி. சேகரை கைது செய்யாவிட்டால், அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தை நடத்த நேரிடும் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
சென்னை:

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க. பிரமுகர் எஸ்.வி.சேகர் ஊடகத் துறைகளைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். பெண்கள் மட்டுமல்ல, அனைவரும் கடுமையான வகையில் கண்டனத்தை தெரிவித்து, வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் அவர்மீது, வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அவரது முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர் ஒரு விழா நிகழ்ச்சியில் பங்கு கொண்டதையும், தனக்கு வணக்கம் தெரிவித்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதைவிடக் கொடுமை என்னவென்றால், நான் சென்னையில் தான் இருக்கிறேன். காவல்துறை முடிந்தால் கைது செய்து பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார்.

காவல்துறை எஸ்.வி.சேகர் விஷயத்தில் கைகட்டிக் கொண்டு இருப்பது ஏன்?. யாருடைய கட்டளையால் இந்த நிலை?. தமிழக அரசின் தலைமைச் செயலாளரே பின்னணியில் இருக்கிறார் என்ற கருத்துப் பரவலாக இருக்கிறதே. உடனே, சவால் விடும் எஸ்.வி. சேகரை கைது செய்யாவிட்டால், அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தை நடத்த நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #tamilnews
Tags:    

Similar News