செய்திகள்

மன்னார்குடி அருகே அதிமுகவினர்- கம்யூனிஸ்டு கட்சியினர் மோதல்

Published On 2018-05-10 15:25 IST   |   Update On 2018-05-10 15:25:00 IST
மன்னார்குடி அருகே அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் ஏற்பட்ட மோதலில் 2 பெண்கள் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.
மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழகண்டமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தெற்கு தெருவில் வசித்து வரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 15 பேர், அக்கட்சியில் இருந்து விலகி கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.கவில் இணைந்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சலசலப்பை உண்டாக்கியது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியை விலகியவர்கள் பற்றி பரபரப்பாக அந்த பகுதியில் பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு தெற்கு தெருவில் சிலர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எப்படி அ.தி.மு.க.வில் சேரலாம்? என்று பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் வந்தனர்.

இதனால் இரு கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இரு கட்சியினரும் ஒருவரையொருவர் தாக்கினர். இதில் சோடா பாட்டில், உருட்டுக்கட்டை, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.

இந்த மோதலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த வேல்முருகன் (30), கருணாகரன் (46), சுதாகர்(33), தினேஷ்குமார்(27), ஸ்டீபன் (23), லதா (30) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதேபோல் அ.தி.மு.க.வை சேர்ந்த முருகதாஸ் (30), இதயா (35) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்த 2 பெண்கள் உள்பட 8 பேரும் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் பற்றி கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அகிலாண்டேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார்.#tamilnews
Tags:    

Similar News