செய்திகள்

நரேந்திர மோடியும், ரஜினியும் இணைந்தால் வெற்றி வாய்ப்பு - ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி

Published On 2018-05-10 01:47 GMT   |   Update On 2018-05-10 01:47 GMT
நரேந்திர மோடியும், ரஜினியும் இணைந்தால் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறினார். #Rajinikanth #Modi #Gurumurthy
சென்னை:

இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனங்களின் தேசிய கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் ராஷிஸ் ஷா தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. துக்ளக் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் ஆடிட்டர் குருமூர்த்தி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

காவிரி விஷயத்தில் தமிழகத்துக்கு சாதகமான முடிவு வரும். இப்போது கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடக்கும் வேளையில் ஏதாவது முடிவு வெளியாகி, அங்கு கலவரம் ஏற்பட்டால் அது தமிழகத்துக்கும் நல்லதல்ல. அதனால்தான் சுப்ரீம் கோர்ட்டும் அதனை புரிந்துகொண்டு மத்திய அரசை கண்டிப்பது போல் கண்டித்து, தேர்தலுக்கு பிறகு தேதியை அறிவித்திருப்பது நல்லது என்றே நினைக்கிறேன். மேலும் இதுபோன்ற நிலையில் எந்த மத்திய அரசும் இதை தள்ளித்தான் போடும்.

காவிரியில் ஜூன் மாதம்தான் நமக்கு நீர் பகிர்வு திட்டம் தொடங்குகிறது. எனவே இந்த ஆணையம் இந்த தேதிக்கு பிறகு அமைந்தால் ஜூன் மாதத்தில் தண்ணீர் வருவதற்கு தடங்கல் இருக்காது.

தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு வருவதை தவிர வேறு வழி இல்லை. ஏனென்றால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விஷயம். மத்திய அரசு அதில் முத்திரை குத்த முடியுமே தவிர, மாறி சிந்தனை செய்ய முடியாது.

தமிழக முதல்-அமைச்சரை பிரதமர் பார்த்தால், தொடர்ந்து கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர்களையும் பார்க்க வேண்டும் என்று கூறுவார்கள். அப்படியானால் பிரதமர் வேறு எந்த வேலையையும் பார்க்க முடியாது, இவர்களைத்தான் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும்.

காவிரி ஆணை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வந்தபோது அதை எதிர்த்து பலர் போராட்டம் நடத்தினார்கள். 15 நாளில் அந்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று கூறினார்கள். முதலில் அதற்கு எதிர்ப்பு, பிறகு அதனை அமல்படுத்த வேண்டும் என்றனர். 600 பக்க உத்தரவை எவரும் படிக்கவில்லை. படிக்காமலேயே போராட்டம் நடக்கிறது.

தமிழக மக்கள் நல்லவர்கள் தான், இப்போது பிரச்சினை செய்து கொண்டு இருப்பவர்கள் அரசியல்வாதிகள் தான். தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடம் இருப்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்தால் நிரப்ப முடியும் என்பது எனது கருத்து. அதை மக்கள் ஏற்காமல் இருக்கலாம். ஒரு கட்சிக்கு தலைமை இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் தலைமை இருப்பதை யாரும் ஏற்கவில்லை.

அதற்கு ரஜினி வந்தால் அவருக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. ரஜினிக்கு மக்கள் மீது உள்ள பிடிப்பு, நரேந்திர மோடியின் ஆட்சி திறமை ஆகிய இந்த இரண்டும் சேர்ந்தால் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது என்னுடைய கருத்து.

இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #Modi #Gurumurthy
Tags:    

Similar News