செய்திகள்

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 18-ந் தேதி தொடங்குகிறது?

Published On 2018-05-10 07:00 IST   |   Update On 2018-05-10 07:00:00 IST
அரசு துறைகளுக்கு மானிய கோரிக்கைகளை ஒதுக்குவதற்காக தமிழக அரசின் சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 18-ந் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #TNAssembly
சென்னை

அரசு துறைகளுக்கு மானிய கோரிக்கைகளை ஒதுக்குவதற்காக தமிழக அரசின் சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 18-ந் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதியன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற்றது. 22-ந் தேதியன்று எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பதிலுரை வழங்கினார். அதைத் தொடர்ந்து சட்டசபையின் நிகழ்ச்சிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

சட்டசபையில் பட்ஜெட் நிறைவேறிய பின்பு, அரசின் ஒவ்வொரு துறைகளும் அவற்றின் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக தேவையான நிதியைப் பெறவேண்டும். இதற்கு சட்டசபையில் விவாதிக்கப்பட்டு, அவையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

அதற்காக துறை வாரியான நிதி ஒதுக்கம் தொடர்பான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட வேண்டும். எனவே சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது.

அரசு துறைகளின் மானிய கோரிக்கைகளுக்கான சட்டசபை கூட்டத்தொடரை வரும் ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டசபை வட்டாரம் தெரிவித்தது. ஜூன் 18-ந் தேதியன்று சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. #TNAssembly
Tags:    

Similar News