செய்திகள்

அ.ம.மு.க. நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவத்தில் வாலிபர் பிடிபட்டார்: போலீசார் தீவிர விசாரணை

Published On 2018-04-28 17:39 GMT   |   Update On 2018-04-28 17:39 GMT
ராமநாதபுரத்தில் அ.ம.மு.க. நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவத்தில் வாலிபர் ஒருவர் பிடிபட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




ராமநாதபுரம்:

ராமநாதபுரம் கொத்தர்தெருவை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் தவமுனியசாமி (வயது 45). டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. கட்சியின் மாவட்ட வர்த்தக அணி செயலாளராக உள்ளார். இவர் சிதம்பரம்பிள்ளை ஊருணி பகுதியில் நடைபயிற்சி சென்றபோது 3 வாலிபர்கள் சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்தார். உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை காட்டியதில் தவமுனியசாமி அடையாளம் காட்டிய 3 நபர்களின் விவரங்களை போலீசார் சேகரித்தனர். இதன்படி ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ்(27), நாகராஜ் மகன் கார்த்திக்(28), சுரேஷ்(26) ஆகியோரை போலீசார் தேடிவந்தனர். போலீசார் தேடுவதை அறிந்து அவர்கள் 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் நவீன தொழில்நுட்ப உதவிகளின் மூலம் மேற்கண்ட 3 பேரையும் பிடிக்க துரித நடவடிக்கை எடுத்தனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா கூறியதாவது:- தவமுனியசாமி தாக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் எம்.எஸ்.கே.நகரை சேர்ந்த நாகராஜ் மகன் கார்த்திக்(28) என்பவர் மட்டும் பிடிபட்டுஉள்ளார் அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தவமுனியசாமியை தாக்கியதற்கு என்ன காரணம், இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம். விசாரணையின் முடிவில்தான் தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது முழுமையாக தெரியவரும். மற்ற 2 பேரையும் பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News