செய்திகள்

குத்தாலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகை கொள்ளை

Published On 2018-03-27 15:56 IST   |   Update On 2018-03-27 15:56:00 IST
நாகை மாவட்டம் குத்தாலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம்:

நாகை மாவட்டம் குத்தாலம் ஓம்காளிஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி சுகிதா. இளையராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சுகிதா தனது குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது சகோதரியின் வளைகாப்பு விழாவுக்காக சுகிதா வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மாலை வீட்டிற்கு வந்த பால்காரர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு, சுகிதாவுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து சுகிதா வீட்டிற்கு வந்து பார்த்ததில் வீட்டின் முன்பக்க கதவு மற்றும் இரண்டு அறைக்கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 45 பவுன் தங்க நகைகள் மற்றும் 1½ கிலோ வெள்ளி பொருட்கள், பட்டுப் புடவைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுபற்றி சுகிதா அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews

Similar News