செய்திகள்

வேதாரண்யம் அருகே 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் கடத்தியது யார்?- போலீசார் விசாரணை

Published On 2018-03-25 17:44 IST   |   Update On 2018-03-25 17:44:00 IST
வேதாரண்யம் அருகே 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் கடத்தியது யார்? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கஞ்சா கடத்தல் மற்றும் தங்கம் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் கடலோர காவல் படை மற்றும் போலீசார் சாகர் கவாச் என்னும் திட்டத்தின் கீழ் ஆறுகாட்டுத்துறையிலிருந்து கோடியக்கரை வரை ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ரோந்து பணியில் 7 குழுக்களை சேர்ந்த 37 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இச்சோதனையில் கடல் வழியாக தீவிரவாதிகள், மற்றும் கடத்தல்காரர்கள் ஊடுருவுகிறார்களா? எனவும், இலங்கையில் இருந்து தங்கம், போதை பொருட்கள் எதுவும் கடத்தி வரப்படுகிறதா? என சுங்கத்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

இந்நிலையில் இன்று காலை வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கடற்கரையில் 3 பொட்டலங்கள் கரை ஒதுங்கி இருந்தது. இதனை கண்ட மக்கள் அதனை எடுத்து பார்த்தபோது அது கஞ்சா பொட்டலங்கள் என தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வேதாரண்யம் காவல் சரக துணை கண்காணிப்பாளர் பாலு, கடலோர காவல்படை டி.எஸ்.பி. கலிதீர்த்தான் மற்றும் போலீசார் சென்று பார்த்தனர். அங்கு கிடைத்த ஒவ்வொரு பொட்டலத்திலும் 2 கிலோ எடையில் மொத்தம் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் அதனை மர்மநபர்கள் கடத்தி சென்றார்களா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே நாலுவேதபதியை சேர்ந்த மீனவர் தங்கராஜ் என்பவர் வலையில் ஒரு பொட்டலம் சிக்கியது. அதில் 2 கிலோ கஞ்சா இருந்தது. இதுபற்றி தகவலறிந்த போலீசார் அதனையும் கைப்பற்றினர்.

கடந்த 3 நாட்களாக 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான போலீசார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் கஞ்சா பொட்டலங்கள் எப்படி கரை ஒதுங்கியது? ஏதேனும் படகு கவிழ்ந்து இந்த கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கியதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News