சீர்காழியில் வீட்டில் பதுக்கிய 1480 மது பாட்டில்கள் பறிமுதல்
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சீர்காழி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமானந்த், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் உள்ள பாண்டியன் என்பவரது வீட்டில் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 31 அட்டை பெட்டிகளில் 1480 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட அந்த மதுபானங்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். அவற்றை போலீசார் பறிமுதல் செய்ததுடன், அந்த வீட்டில் இருந்த ராம்குமார் என்பவரையும் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான பாண்டியனை தேடி வருகின்றனர். மது கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
சீர்காழியில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.