செய்திகள்

புழல் ஜெயிலில் பினு - கூட்டாளிகள் இருப்பதால் ரவுடி ராதாகிருஷ்ணன் கடலூர் சிறைக்கு மாற்றம்

Published On 2018-03-06 10:15 GMT   |   Update On 2018-03-06 10:15 GMT
புழல் ஜெயிலில் எதிரிகளான பினு மற்றும் கூட்டாளிகள் இருப்பதால் போலீசார் ராதாகிருஷ்ணனை கடலூர் சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.
போரூர்:

சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி பினு. கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்றத்தூர் அருகே உள்ள காலி இடத்தில் ரவுடி கும்பலுடன் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.

அப்போது அங்கு வந்த போலீசார் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரும்பாக்கத்தைச் சேர்ந்த மற்றொரு ரவுடி ராதாகிருஷ்ணனை தீர்த்து கட்ட பினு திட்டமிட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து ரவுடி கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு ரவுடி பினு அம்பத்தூர் துணை கமி‌ஷனர் முன்பு சரண் அடைந்தார். அவரை போலீசார் விசாரணை செய்து புழல் செயிலில் அடைத்தனர்.

இதற்கிடையே அரும்பாக்கம் ரவுடி ராதா என்கிற ராதாகிருஷ்ணன் ஏற்கனவே சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்து இருந்தார். அவரை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் காவல் முடிந்ததால் நேற்று மாலை அல்லிகுளம் 5-வது நடுவர் நீதி மன்றத்தில் ராதாகிருஷ்ணனை போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது அதே நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணனின் எதிரியான மற்றொரு ரவுடி தட்சிணாமூர்த்தியும் ஆஜராக வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதற்கிடையே ரவுடி ராதாகிருஷ்ணனை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அண்ணா நகர் உதவி கமி‌ஷனர் குணசேகர் மற்றும் அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் ராதாகிருஷ்ணனை புழல் சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.

ஆனால் அங்கு ராதாகிருஷ்ணனின் எதிரிகளான பினு, கனகு, தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஏற்கனவே இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ராதாகிருஷ்ணனை அடைக்க சிறை நிர்வாகம் மறுத்து விட்டது.

இதையடுத்து உடனடியாக போலீசார் ராதாகிருஷ்ணனை கடலூர் சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். #tamilnews

Tags:    

Similar News