சேலையூரில் கடன் வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் மோசடி: 5 வாலிபர்கள் கைது
தாம்பரம்:
சேலையூரை அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் வி.ஜி.பி. சரவனா நகரை சேர்ந்தவர் மனோஜ்குமார். தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு கும்பல் பிரபல நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருவதாகவும் கூறினார்கள்.
இதை நம்பிய மனோஜ் குமாரிடம் அக்கும்பல் முதலில் கமிஷனாக ரூ. 63 ஆயிரம் தர வேண்டும் என்று கூறியது. இதையடுத்து அவர் ரூ. 63 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் அந்த கும்பல் கொடுத்த வங்கி கணக்கில் பண பரிமாற்றம் செய்தார்.
ஆனால் கடன் வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். அதன்பிறகு அக்கும்பலை தொடர்பு கொண்டபோது செல்போன் ’சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.
இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மனோஜ்குமார் சேலையூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆல்பின் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் மோசடி செய்த பள்ளிக்கரணையை சேர்ந்த வரதராஜன், அலெக்ஸ், விக்கி, இம்ரான், ராஜேஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.