நாகை அருகே அடகு கடை உரிமையாளர் வீட்டில் 35 பவுன் நகை திருட்டு
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள இலுப்பூர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 48). அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய தம்பி சீனிவாசன். அண்ணன் தம்பி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சீனிவாசன் தனது தாய்- மனைவியுடன் மேல் மருவத்தூர் கோவிலுக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் நேற்று இரவு வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
பின்னர் வீட்டில் இருந்த 35 பவுன் தங்க நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். இதைத் தொடர்ந்து இன்று காலை பாபு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது பின் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து அவர் கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதைத் தொடர்ந்து நாகையில் இருந்து கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்தனர். கொள்ளையடித்து சென்ற கும்பலை பிடிக்க சம்பவ இடத்துக்கு மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.
பாபு அடகு கடை வைத்திருப்பதை நோட்ட மிட்ட கும்பல் வீடு புகுந்து கொள்ளையடித்து சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை போன நகைகள் அவருடையதா? இல்லை அடகு வைப்பதற்காக வந்த நகைகளா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடகு கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews