செய்திகள்

வியாபாரி மீது தாக்குதல்: கர்நாடக வாலிபர்கள் 11 பேர் கைது

Published On 2018-01-04 12:34 IST   |   Update On 2018-01-04 12:34:00 IST
தாம்பரம் அருகே வியாபாரி மீது தாக்குதல் நடத்திய கர்நாடக வாலிபர்கள் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:

பல்லாவரம் நேரு நகரை சேர்ந்தவர் பாபு. பழைய இரும்பு வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.

இவர் பல்லாவரம் ரேடியல் சாலையில் புதிதாக கட்டப்பட்ட கட்டுமான நிறுவனத்தில் பழைய பொருட்களை வாங்க காண்டிராக்ட் எடுத்து இருந்தார்.

நேற்று இரவு பாபு உள்பட ஊழியர்கள் சிலர் அங்கிருந்த பழைய இரும்புகளை வண்டிகளில் ஏற்றினர். அப்போது 5 கார்களில் 20-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் அங்கு வந்தனர்.

அவர்கள் பாபுவிடம் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கினர். அங்கிருந்த ஊழியர்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பல்லாவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட 11 பேரை மடக்கி பிடித்தனர். மேலும் 3 கார்களில் சிலர் தப்பி சென்று விட்டனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. பழைய இரும்பு பொருட்கள் வாங்குவது தொடர்பாக பாபாவுக்கும், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் தாக்குதல் நடந்திருப்பது தெரிய வந்தது.

கைதான 11 பேரிடம் இருந்து கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் கைபற்றப்பட்டன. 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News