கோடியக்கரை சரணாலயத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
வேதாரண்யம்,:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டில் பசுமை மாறா காடுகளும், சதுப்பு நிலங்களும் அமைந்துள்ளது. இந்த காடு 36 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த காட்டில் மூலிகை வனமும் உள்ளது. மேலும் இந்த காட்டில் வனவிலங்கு சரணாலயம் மற்றும் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
இந்த வனவிலங்கு சரணாலயத்தில் வெளிமான், புள்ளிமான், குரங்கு, முயல், காட்டுப்பன்றி, நரி முதலிய விலங்குகளும், பறவைகள் சரணாலயத்தில் வெளிநாடு மற்றும் உள்நாடு வகையைச் சேர்ந்த 256 வகையான பறவை இனங்களும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் இங்கு வந்து தங்கி சதுப்பு நிலத்தில் உள்ள புழு, பூச்சிகளை உண்டு, இன விருத்தி செய்து இங்கிருந்து தங்கள் சொந்த வாழிடங்களுக்கு திரும்புகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக வேதாரண்யம் பகுதியில் சரியாக பருவமழை பெய்யாததால் காட்டு பகுதியில் போதுமான அளவு தண்ணீர் இல்லை. இதனால் பறவைகளுக்கு தேவையான உணவுவகைகள் இல்லாததால் கோடியக்கரைக்கு பறவைகள் அதிகமாக வரவில்லை.
இந்தாண்டு வேதாரண்யம் பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து குவிய தொடங்கி உள்ளன. ஈரான், ஈராக், சைபீரியா, காஸ்பியன் கடற்பகுதியில் இருந்து பிளமிங்கோ என்று அழைக்கப்படும் பூ நாரைகள் வந்துள்ளன.
இந்த பறவைகளை ஆராய்ச்சி செய்வதற்காக ஆராய்ச்சியாளர் பாலச் சந்திரன் இங்கு வந்து பறவைகளை பிடித்து, முகாமிட்டு ஆராய்ச்சி செய்து வரு கின்றார். இங்கு வரும் பறவைகளில் செங்கால்நாரை, உள்ளான் வகைகள், நாரை வகைகள், நத்தைகொத்தி நாரை, கூழைக்கிடா, மயில் போன்ற வகைகள் ஏராளமாக காணப்படுகிறது. இதை சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பதற்காக வனத்துறை பல்வேறு வசதிகளை செய் துள்ளனர். இதுகுறித்து வனச்சரக அலுவலர் அயூப்கான் கூறியதாவது:-
சரணாலயத்துக்கு வந்து குவிந்துள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த பறவை இனங்களை சுற்றுலா பயணிகள் , காட்டு பகுதியில் உள்ள பம்ப் ஹவுஸ், இரட்டை தீவு, கோவை தீவு, மணவாய்க்கால் மற்றும் கடற்கரை பகுதிகளில் பார்த்து மகிழலாம். பறவைகளின் அழகு மற்றும் பறவைகள் பறந்து செல்லும் காட்சிகளை கண்டுகளிக்க காலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் 6 மணி வரையிலும் பறவைகளை அதிகமாக பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆண்டு நல்ல சீதோஷ்ன நிலை நிலவுவதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகமாக உள்ளது.இதனால் வெளிநாட்டுகளில் இருந்து வரும் கண்கவர் பறவைகளை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.