அலையில் இழுத்து செல்லப்பட்ட செருப்பை எடுக்க முயன்ற என்ஜினீயர் மாணவர் கடலில் மூழ்கி பலி
மயிலாடுதுறை:
சென்னை வடபழனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் சந்திரமோகன் (வயது 20). என்ஜினீயரிங் மாணவர். கிருஷ்ணமூர்த்தி தனது குடும்பத்தினருடன் விடுமுறையையொட்டி வேளாங்கண்ணிக்கு வந்தார்.
இந்த நிலையில் சந்திரமோகன் நேற்று மயிலாடு துறை சீனிவாசபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் சந்திரமோகன், தனது நண்பர் சத்திய நாராயணனுடன் தரங்கம்பாடி கடற்கரைக்கு சென்றார்.
அப்போது முகத்துவாரம் அருகே சென்றபோது சந்திரமோகனின் செருப்பு கடல் அலை இழுத்து சென்றது. இதனால் செருப்பை எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக சந்திரமோகனை கடல் அலை இழுத்து சென்றது.
இதில் அவர் அலறிய சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சந்திரமோகனை கடலில் இருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து தரங்கம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.