காஞ்சீபுரம் அருகே கத்திமுனையில் காரை கடத்திய 4 பேர் கைது
காஞ்சீபுரம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர் அம்ஜத்கான். இவர் கடந்த மாதம் 10-ந் தேதி கிருஷ்ணகிரியில் இருந்து சென்னைக்கு காரில் வந்தார்.
நள்ளிரவு வாலாஜா அருகே உள்ள டோல்கேட் பகுதியில் வந்து கொண்டிருந்த போது 4 பேர் கும்பல் காரை நிறுத்தினர். அவர்கள் அம்ஜத்கானிடம் கத்தியை காட்டி மிரட்டி காரை கடத்தி சென்றுவிட்டனர்.
இது குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். காரின் பதிவு எண்ணை வைத்து டோல்கேட்டு மற்றும் சாலையோர கடைகள் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் ஒரு சுங்கச் சாவடியில் இருந்த கண்காணிப்பு காமிராவில் கடத்தல் கும்பலின் உருவம் பதிவாகி இருந்தது.
இதனை வைத்து ராணிப்பேட்டை, முத்துக்கடை பகுதியில் பதுங்கி இருந்த கார் கடத்தல் கும்பலான வேலூர் மாவட்டம் மாந்தாங்கல் மோட்டூர் கிராத்தைச் சேரந்த தீனா என்ற தீனதயாளன், புளியன்கள் கிராமத்தை சேர்ந்த பாலாஜி, பாலு என்ற பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை போலீசார் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.