குரோம்பேட்டையில் லாரி மீது கார் மோதல்: டிரைவர்-காவலாளி பலி
தாம்பரம்:
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது25). இவர் மறை மலைநகரில் உள்ள கார் தொழிற்சாலையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இதே தொழிற்சாலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜேந்திரன் (54) என்பவர் காவலாளியாக வேலை பார்த்தார்.
நேற்று இரவு கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர்களை சரண்ராஜும், ராஜேந்திரனும் காரில் அழைத்துச் சென்று வீடுகளில் விட்டனர்.
பின்னர் அவர்கள் அதே காரில் தாம்பரத்தில் இருந்து கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.50 மணியளவில் கார் குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது குரோம்பேட்டையைச் சேர்ந்த டீ வியாபாரி தியாகராஜன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கார் டிரைவர் சரண்ராஜ் தூக்க கலக்கத்தில் இருந்ததால் கார் தறிகெட்டு ஓடி டீ வியாபாரி தியாகராஜன் மீது மோதியது.
பின்னர் கார் வேகமாக ஓடி சாலை ஓரம் பழுதாகி நின்ற லாரி மீது மோதி நின்றது. இதில் கார் டிரைவர் சரண்ராஜ், காவலாளி ராஜேந்திரன் ஆகிய இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
டீ வியாபாரி தியாகராஜன் படுகாயம் அடைந்தார். அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.