பள்ளி கட்டிடம் கட்ட இடம் தானமாக வழங்கிய 100 வயது மூதாட்டி
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பிரபல உப்பு வணிகர் எஸ்.கே.சுப்பையா பிள்ளை-சின்னம்மாள் ஆச்சி ஆகியோரின் ஒரே மகள் வேதாம்பாள் ஆச்சி. இவருக்கு நேற்றுடன் (20-ந் தேதி) அன்று 100 வயது பூர்த்தியானது. இவரது உறவினர்கள் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.
வேதாம்பாள் ஆச்சி சிறு வயதிலிருந்தே தந்தை சுப்பையாபிள்ளையுடன் இணைந்து உப்புத்தொழில், விவசாயம், புகையிலை சாகுபடி போன்றவற்றை நேரடியாக கவனிப்பது வழக்கம். இவர் சைவ குடும்பத்தைச் சேர்ந்தவர்.
தற்போது தனது 100-வது வயதிலும் சுறுசுறுப்புடன் பணிகளை மேற்கொள்கிறார். இவர் ஜாங்கிரி, ஓமப்பொடி ஆகியவற்றை விரும்பி சாப்பிட்டு வருகிறார். காலை தயிருடன் 2 இட்லியும், மதியம் கீரை காய்கறிகளுடன் சாதமும், இரவு இட்லி, சாம்பாருடன் சாப்பிட்டு வருகிறார். இடையில் காப்பி மட்டும் அருந்தி வருகிறார். இன்றும் பத்திரிகை, தபால்கள் ஆகியவற்றை படித்து வருகிறார்.
இவர் தகப்பனார் பெயரில் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளிக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை தானமாக அளித்தும், கட்டிடங்களும் கட்டி கொடுத்துள்ளார். வேதாரண்யம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாத நிலையில் அதற்கு அரசுக்கு செலுத்த வேண்டிய பங்கு தொகையை தானே முன்வந்து செலுத்தியும், பள்ளி கட்டிடமும் கட்டி கொடுத்துள்ளார்.
வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு கொடி மரம் உள்ளிட்ட பல்வேறு கோவில் பணிகளை செய்து கொடுத்துள்ளார்.
மேலும் வேதாரண்யம் உப்பள தொழிலாளர்களின் ஏழை மாணவ, மாணவிகளின் கல்விக்கு உதவி புரிந்து வருகிறார். இது மட்டு மல்லாது வேதாரண்யம் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவிற்காக கட்டிடம் கட்டு வதற்கு உதவி செய்துள்ளார். உப்பு சத்தியாகிரகம் நினைவாக நினைவு தூண் அமைக்க, அந்த இடத்தை சுற்றியுள்ள 10 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கி உள்ளார். வேதாரண்யம் நகர் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி உதவி செய்துள்ளார். இவரை உறவினர்கள் அத்தை என்றும், பொதுமக்கள் ஆச்சி என்றும் செல்லமாக அழைத்து வருகிறார்கள்.