செய்திகள்

கழுத்து அறுத்து தாய், மனைவி-குழந்தைகள் கொலை நீதிபதியிடம் ஜவுளி வியாபாரி ரகசிய வாக்குமூலம்

Published On 2017-12-20 09:20 GMT   |   Update On 2017-12-20 09:20 GMT
பல்லாவரத்தை அடுத்த பம்மலில் தாய், மனைவி, குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற ஜவுளி வியாபாரி உடல்நிலை தேறிய நிலையில் ஜார்ஜ் டவுன் கோர்ட்டு நீதிபதி வடிவேலுவிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

தாம்பரம்:

பல்லாவரத்தை அடுத்த பம்மல் நந்தனார் தெருவை சேர்ந்தவர் தாமோதரன் (42). ஜவுளி வியாபாரி. இவர் கடந்த 12-ந்தேதி தனது தாயார் சரசுவதி, மனைவி தீபா, மகன் ரோசன், மகள் மீனாட்சி ஆகியோரை கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

பின்னர் தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார். ஆனால் ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிர்பிழைத்தார்.

இதற்கிடையே உடல்நிலை தேறிய நிலையில் நேற்று அவர் ஜார்ஜ் டவுன் கோர்ட்டு நீதிபதி வடிவேலுவிடம் ரகசிய வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் தொல்லை காரணமாக தாய், மனைவி, மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயன்றதாக அதில் கூறப்பட்டிருப்பதாக தெரிகிறது.

சங்கர்நகர் போலீசில் தாமோதரனின் மாமனார் பாலகிருஷ்ணன் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தாமோதரன் மீது கொலை மற்றும் தற்கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது உடல்நிலை தேறியுள்ளதை தொடர்ந்து இன்னும் ஓரிரு நாளில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News