செய்திகள்

மயிலாடுதுறை அருகே 60 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு

Published On 2017-12-19 12:14 IST   |   Update On 2017-12-19 12:14:00 IST
மயிலாடுதுறை அருகே மூன்று ஐம்பொன் சிலைகளை 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே மூன்று ஐம்பொன் சிலைகளை 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள நல்லத்துக்குடியில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. நாளடைவில் இக்கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து இடிந்து விழுந்துள்ளது.

இதனால் இக்கோவிலை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஊர் பெரியவர்கள் சேர்ந்து கோவிலில் இருந்த 2 வரதராஜ பெருமாள் சிலைகள், ஒரு மகாவிஷ்ணு சிலை ஆகிய 3 ஐம்பொன் சிலைகளை அதே ஊரில் உள்ள செல்லியம்மன் கோவிலில் வைத்து பூட்டி விட்டனர். இந்த சம்பவம் கடந்த 1957-ம் ஆண்டில் நடந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த கோவிலில் அதிக சிலைகள் இருப்பதாகவும் அவைகளை மீட்க வேண்டி அறநிலையத்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதேபோல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுவுக்கும் புகார் வந்தது. இதனால் அவர் நாகை மாவட்ட கலெக்டர் கவனத்துக்கு கொண்டு சென்றார். பின்னர் கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை அறநிலையத் துறை அதிகாரிகள் நல்லத்துக்குடி சென்று ஆய்வு நடத்தினர். செல்லியம்மன் கோவிலில் 3 ஐம்பொன் சிலைகள் இருப்பது தெரிய வந்தது.

பின்னர் அங்கிருந்த 3 ஐம்பொன் சிலைகளையும் அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். இதை தொடர்ந்து 3 ஐம்பொன் சிலைகளையும் திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

Similar News