திருப்புவனம் அருகே முதியவரை தாக்கி பணம் பறிப்பு: ரவுடி உள்பட 2 பேர் கைது
சிவகங்கை:
திருப்புவனம் அருகே உள்ள கீழராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேங்கை (வயது 65). இவர் அந்த பகுதியில் நடந்து சென்றபோது பூமிநாதன் மகன் நாகப்பன் (30), மேலராங்கியம் வேலு (27) ஆகியோர் வழிமறித்தனர்.
அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி சேங்கையிடம் பணம் கேட்டனர். தர மறுத்ததால் அவரை தாக்கிய 2 பேரும் பணத்தையும் பறித்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து திருப்புவனம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் திருமலைநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து பணம் பறித்ததாக நாகப்பன், வேலுவை கைது செய்தார். கைதான நாகப்பன் பிரபல ரவுடி ஆவார். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
காளையார்கோவில் அருகே உள்ள மேல வளையப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (27), லாரி டிரைவர். இவருக்கும் மேட்டுப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் முத்துசாமி (35) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த விரோதத்தில் முத்துசாமி, தமிழரசன் (41), ராஜா (32), செபஸ்டின் (35) ஆகியோர் சேர்ந்து தன்னை தாக்கியதோடு 1½ பவுன் நகையை பறித்துச் சென்றதாக கார்த்திக் புகார் செய்தார்.
காளையார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தார். மற்ற 3 பேரை தேடி வருகிறார்.