செய்திகள்

தேவகோட்டை, திருப்பத்தூர் வீடுகளில் திருடிய 4 கொள்ளையர்கள் கைது

Published On 2017-10-25 15:39 IST   |   Update On 2017-10-25 15:39:00 IST
தேவகோட்டை, திருப்பத்தூர் பகுதிகளில் நடந்த கொள்ளையில் திருடு போன 55 பவுன் நகைகள் மீட்கப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, திருப்பத்தூர் பகுதிகளில் நடந்த கொள்ளையில் திருடு போன 55 பவுன் நகைகள் மீட்கப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 12-ந் தேதி தேவகோட்டை தாலுகா சோமநாதபுரம் காவல் நிலைய சரகம் காதிநகர், கீழசெவல்பட்டி விராமதி காரைக்குடி தாலுகா நேமத்தான்பட்டி ஆகிய 3 ஊர்களில் பகல் நேரத்தில் 3 வீடுகளில் திருடு போனது.

இதில் மொத்தம் 55 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் காரைக்குடி டி.எஸ்.பி.கார்த்திகேயன் தலைமையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அழகர், இன்ஸ்பெக்டர் பால்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சேவியர், முதல்நிலை காவலர்கள் சுரேஷ், பார்த்திபன், தென்னரசு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இவர்கள் தேவகோட்டை ரஸ்தா அமராவதி புதூர் கல்லுப்பட்டி விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்தின் பேரில் காரில் வந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் முரண்பாடான தகவலை கூறினார்கள். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் காதிநகர், விராமதி, நேமத்தான்பட்டி ஆகிய ஊர்களில் பகல் நேரத்தில் வீடுகளில் கொள்ளையடித்தவர்கள் என்பது தெரியவந்தது.

பிடிபட்டவர்கள் மதுரை புட்டுத்தோப்பு செக்கடித்தெருவைச் சேர்ந்த சோனை மகன் பட்டறை சுரேஷ் (வயது 29), முசிறி காமராஜர் வீதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ராஜ்கமல் (30) மணமேல்குடி கோட்டை பட்டணம் பொன்னைவயல் ராமச்சந்திரன் மகன் முத்து (25), திருச்சி அரிய மங்கலம் அம்மாகுளம் கலை வாணர்வீதி, கருப்பையா மகன் வினோத் (30) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 55 பவுன் நகைகள், ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம், லேப்டாப், எல்.இ.டி. டிவி. ஆகியவைகள் கைப்பற்றப்பட்டன. கொள்ளையர்கள் 4 பேரும் காரைக்குடி மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

இதில் பட்டறை சுரேஷ், ராஜ்கமல், வினோத் ஆகிய 3 பேரும் திருச்சி, மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு அப்பகுதி போலீசாரால் தேடப்பட்டு வந்தனர்.

10 நாட்களுக்குள் கொள்ளையர்களை கண்டுபிடித்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகள், லேப்டாப், டி.வி. மற்றும் கொள்ளையர்கள் பயன்படுத்திய திருட்டு காரை பிடித்ததற்காக காரைக்குடி டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினரை எஸ்.பி. ஜெயச்சந்திரன் பாராட்டினார்.

Similar News