செய்திகள்

காரைக்குடி அருகே பேராசிரியை வீட்டில் நகைகள்-லேப்டாப் கொள்ளை

Published On 2017-10-23 16:29 IST   |   Update On 2017-10-23 16:29:00 IST
அரசு கலைக்கல்லூரி பேராசிரியை வீட்டில் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் லேப்-டாப்பை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

காரைக்குடி:

காரைக்குடி அருகே உள்ள நேமத்தான்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன் (வயது 47). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி அமிர்தவள்ளி (45). புதுக்கோட்டை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார். இவர்கள் தீபாவளி பண்டிகைக்காக கடந்த 12-ந் தேதி, தங்களது சொந்த ஊரான பிள்ளையார்பட்டி அருகே உள்ள திருகூடல்பட்டி சென்றனர்.

நேற்று இரவு அவர்கள் வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலிகள், 2 பவுன் ஜோடி வளையல்கள் மற்றும் லேப்டாப் திருட்டு போயிருந்தது.

இது குறித்து செட்டி நாடு போலீசில் புகார் செய்யப் பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

காரைக்குடி நவரத்தினா நகரைச் சேர்ந்தவர் தமிழ்மாறன். இவரது மனைவி மஞ்சுளா (33). கணவர், சிங்கப்பூரில் வேலை பார்ப்பதால் மஞ்சுளா தனியாக வசித்து வந்தார்.

கடந்த 20-ந் தேதி இவர், கண்டரமாணிக்கத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனை அறிந்த யாரோ மர்ம மனிதர்கள் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ. 40 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News