செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு: 4 பேர் மீது வழக்கு

Published On 2017-09-28 17:24 IST   |   Update On 2017-09-28 17:24:00 IST
கல்லல் அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்த கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள குருந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சவுந்தரம் (வயது 25). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

சில மாதங்களாக கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சவுந்தரம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் சவுந்தரத்தின் உடலை எரித்து விட்டனர்.

தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி ராஜா கல்லல் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் காரைக்குடி டி.எஸ்.பி. பாஸ்கரன் விசாரணை நடத்தி பெண் தற்கொலை செய்ததை போலீசுக்கு தெரிவிக்காமல் உடலை எரித்ததாக கணவர் பழனியப்பன், அவரது தந்தை சுகுமார், உறவினர்கள் கண்ணன், சரவணன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு உத்தரவிட்டார். அதன்பேரில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது.

சிவகங்கை தாலுகா மதகுபட்டி அருகே உள்ள வீட்டனேரியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி வள்ளிமுத்து. கடந்த சில மாதங்களாக 2 பேருக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.

இதனால் விரக்தி அடைந்த வள்ளிமுத்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காளையார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்

Similar News