வத்தலக்குண்டு அருகே டெங்கு காய்ச்சலுக்கு 7-ம் வகுப்பு மாணவி பலி
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே வெங்கடாஸ்திரிகோட்டை காலனி தெருவை சேர்ந்தவர் மொட்டையாண்டி கூலித்தொழிலாளி. இவரது மகள் சுபலட்சுமி (வயது13). வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிக்கப்பட்டதால் அப்பகுதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இருந்தபோதும் காய்ச்சலின் தீவிரம் அதிகரித்ததால் உசிலம்பட்டி மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி சுபலட்சுமி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கடந்த 6 மாதமாகவே குடிநீர் வரவில்லை. இது குறித்து யூனியன் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் வேறு வழியின்றி டிராக்டர், லாரியில் வரும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்தோம். இவர்கள் எங்கிருந்து கொண்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை.
அன்றுமுதல் பலர் மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது சுபலட்சுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை மதுரை அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். அவரது சகோதரி திவேஸ்வரிக்கும் காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. எனவே சுகாதாரத்துறையினர் இப்பகுதியில் முகாமிட்டு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். சுகாதாரமான குடிநீர் வழங்க யூனியன் அதிகாரிகள் முன் வரவேண்டும் என்றனர்.