செய்திகள்

ரூ. 2 கோடி வாடகை பாக்கி: ரஜினி மனைவி லதா நடத்திய கிண்டி பள்ளிக்கு பூட்டு போட்ட உரிமையாளர்

Published On 2017-08-16 16:19 IST   |   Update On 2017-08-16 16:19:00 IST
சென்னை கிண்டியில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா நடத்தி வரும் பள்ளியின் வாடகை தொகையை செலுத்தாததால் அப்பள்ளிக்கு உரிமையாளர் பூட்டு போட்டதால் மாணவர்கள் பரிதவித்தனர்.
ஆலந்தூர்:

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா நடத்தும் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வந்தது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். வாடகை கட்டிடத்தில் இந்த பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளிக்கு கடந்த 2009-ம் ஆண்டு முதல் வாடகை பாக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கட்டிட உரிமையாளர் வெங்கடேஷ் வரலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருதரப்பினரையும் அழைத்து நீதிபதி சமரசம் செய்தார். ரூ. 11 கோடி அளவுக்கு வாடகை பாக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. அவ்வளவு தொகையை உடனடியாக கொடுக்க முடியாது என்பதால் ரூ. 2 கோடி கொடுக்கும்படியும், மாதம் ரூ. 5½ லட்சம் வாடகை என்பதை ரூ. 10 லட்சமாக உயர்த்திக் கொடுக்கும்படியும் நீதிபதி மத்தியஸ்தம் செய்து வைத்தார். இது தொடர்பான ஆவணத்தில் வெங்கடேஷ்வரலு தரப்பினர் கையெழுத்து போட்டு விட்டனர்.

ஆனால் லதா தரப்பினர் இதுவரை கையெழுத்து போடாமல் இழுத்தடித்து வந்தனர். இதனால் இதுவரை ரூ. 1 கோடி ரூபாய் கூட கொடுக்கவில்லை. வாடகையும் கொடுக்கவில்லை.


தற்போது பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கட்டிட உரிமையாளர் வெங்கடேஷ்வரலு நேற்று மாலை பள்ளியின் உட்புறம் பூட்டு போட்டு பூட்டினார்.

இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு மாணவ- மாணவிகளும், ஆசிரியர்களும் வந்தனர். அப்போது பள்ளி மூடப்பட்டிருந்ததால் அவர்கள் வெளியே நின்றபடி தவித்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாணவ-மாணவிகளையும், ஆசிரியர்களையும் வேளச்சேரியில் உள்ள மற்றொரு பள்ளிக்கு அழைத்து சென்றனர்.

Similar News