செய்திகள்

மானாமதுரை அருகே டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி ரூ.2 லட்சம் கொள்ளை

Published On 2017-07-31 15:42 IST   |   Update On 2017-07-31 15:42:00 IST
மானாமதுரை அருகே டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டி ரூ.2 லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே துத்திக்குளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதியில் இந்த கடை மட்டுமே இருப்பதால் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதும்.

நேற்று கடையில் விற்பனை அதிகமாக இருந்தது. ஊழியர்கள் முருகேசன், ரவி ஆகியோர் பணியில் இருந்தனர்.

இரவு 9.45 மணி அளவில் ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் முருகேசனிடம் ரூ.200 கொடுத்து மதுபாட்டிலை வாங்கினர். மீதி சில்லரையை கொடுப்பதற்காக அவர் கல்லாபெட்டியை திறந்தார்.

அப்போது 2 பேரில் ஒருவன் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து மற்றொரு ஊழியரான ரவியின் கழுத்தில் வைத்து மிரட்டினான். இதனால் பயந்துபோன முருகேசன் செய்வதறியாது திகைத்தார்.

உடனே மர்மநபர்கள் விற்பனை பணம் ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர்.

இதுகுறித்து மானாமதுரை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் நேற்று இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் கொள்ளையர்கள் சிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை தேடி வருகிறார்கள்.

Similar News