தாம்பரத்தில் அ.தி.மு.க. பிரமுகர் கார் தீவைத்து எரிப்பு
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த கடப்பேரி, அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோபிநாதன், தாம்பரம் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர். தற்போது அ.தி.மு.க. நகர பேரவை செயலாளராக உள்ளார்.
இவர் அதே பகுதியில் கட்சி அலுவலகம் வைத்து உள்ளார். நேற்று இரவு அலுவலகம் அருகில் உள்ள கொட்டகையில் காரை நிறுத்தி இருந்தார்.
இந்நிலையில் நள்ளிரவு திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென கொட்டகையிலும் பரவி தீப்பற்றியது.
அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் கொட்டகையும், காரும் முற்றிலும் எரிந்து நாசமானது.
காரில் பெட்ரோல் டேங்க் உடைக்கப்பட்டு இருந்தது. மர்மக்கும்பல் பெட்ரோல் டேங்கை உடைத்து தீவைத்து இருக்கலாம் என்று தெரிகிறது.
கோபிநாதன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தொழில் போட்டியில் கார் தீவைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் இருந்தது குறிப்பிடத்தக்கது.