செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நாகை விவசாயிகள் வெளிநடப்பு

Published On 2017-07-29 22:07 IST   |   Update On 2017-07-29 22:07:00 IST
நாகை மாவட்டம் தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய பகுதிகளில் பெட்ரோலிய ஆய்வு மண்டலம் அமைக்கப்படுவதை கண்டித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:-

நாகை மாவட்டம் தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய பகுதிகளில் பெட்ரோலிய ஆய்வு மண்டலம் அமைப்பதாக கடந்த 19-ந் தேதி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் 21 வருவாய் கிராமங்களில் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படும். இந்த அறிவிப்பு விவசாயிகளை வாழ வைக்காமல் சாக அடிக்க நினைகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அனைத்து விவசாயிகளும் அரங்கத்தில் இருந்து கோ‌ஷங்கள் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து கூறினர்.

சரபோஜி (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலக்குழு உறுப்பினர்) :- அனைத்து விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும். தனியார் மூலம் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவது முற்றிலும் விவசாயிகளை பாதிக்கிறது. ஆதலால் தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோமு.இளங்கோ (பாரம் பரிய நெல் காப்பாளர்):- இயற்கை வேளாண்மையை நாகை மாவட்டத்தில் மேம்படுத்திட பாரம்பரிய நெல் விதைகளை முழு மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் சேகர், கூட்டுறவு இணைபதிவாளர் ஜெயம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், உதவி கலெக்டர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News