பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை ஏற்க மறுத்த கணவர் கைது
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மறைஞாய நல்லூரை சேர்ந்தவர் தோட்ட வாத்தியார் ரெத்தினம் மகள் வளர்மதி (32). இவருக்கும் கரியாப்பட்டினத்தை சேர்ந்த ராமையன் மகன் மணிவண்ணனுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
கடந்த 11 மாதங்களுக்கு முன் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து கடந்த 2 மாதத்திற்கு முன் வளர்மதி தனது கணவர் வீட்டிற்கு வந்தார். பெண் குழந்தை பெற்றதால் அவரை கணவர் ஏற்க மறுத்தார். இதனால் வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் வளர்மதி தனது குழந்தையுடன் குடியிருந்து வந்தார்.
இந்த நிலையில் முருங்கைகாய் பறிக்க வளர்மதி தனது கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த கணவர் மணிவண்ணன் மனைவியை சரமாரி தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த வளர்மதி வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து அவர் கரியாப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்தார்.