அ.தி.மு.க பிரமுகர் கொலை: வேதாரண்யம் கோர்ட்டில் 3 பேர் சரண்
வேதாரண்யம்:
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள கீழகோவில்பத்து உடையார் கோவில் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசிம்மன் (வயது38). அ.தி.மு.க. பிரமுகரான இவர், கீழகோவில்பத்து ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் ஆவார். தற்போது வடபாதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராக பதவி வகித்து வந்தார்.
ராஜசிம்மன் நேற்றுமுன்தினம் தனது நண்பர் ஒருவருடன் உடையார்கோவிலில் இருந்து அம்மாப்பேட்டை அருகே உள்ள சாலியமங்கலம் வழியாக திருபுவனம் கிராமத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார்சைக்கிள் மற்றும் காரில் வந்த மர்ம நபர்கள் 6 பேர் ராஜசிம்மனின் கார் கண்ணாடியை அடித்து உடைத்தனர். பின்னர் அவரை காரில் இருந்து வெளியே இழுத்து போட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ராஜசிம்மன், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதைத்தொடர்ந்து மர்ம நபர்கள் 6 பேரும் தாங்கள் வந்த கார் மற்றும் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் ராஜசிம்மன் கொலை தொடர்பாக வலங்கைமான் அருகே உள்ள முள்ளியூரை சேர்ந்த செல்வகுமார் (35), தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (35), மன்னார்குடி அருகே உள்ள காளவாய்க்கரையை சேர்ந்த மாரிமுத்து (29) ஆகிய 3 பேரும் நேற்று வேதாரண்யம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை நீதிபதி தீனதயாளன் வருகிற 31-ந் தேதி(திங்கட்கிழமை) வரை நாகை கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.