செய்திகள்

மானாமதுரை அருகே ரே‌ஷன் கடையில் தண்ணீர் கலந்த மண்எண்ணெய் வினியோகம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

Published On 2017-07-25 17:15 GMT   |   Update On 2017-07-25 17:18 GMT
மானாமதுரை அருகே மாங்குளத்தில் உள்ள ரே‌ஷன் கடையில் தண்ணீர் கலந்த மண்எண்ணெய் வினியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மானாமதுரை:

மானாமதுரை அருகே உள்ளது மாங்குளம் கிராமம். இங்கு 300–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என தனியாக ரே‌ஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு உட்பட்டு 180 குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றின் மூலம் மண்எண்ணெய், சீனி, அரிசி உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் இங்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மாதந்தோறும் மண்எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. மானாமதுரை பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் இரவு நேரங்களில் பெரும்பாலும் மண்எண்ணெய் விளக்குதான் பயன்படுத்தப்படுகிறது. கால்நடை கொட்டகையில் மண்எண்ணெய் விளக்குகளே பயன்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில் மாங்குளம் ரே‌ஷன் கடையில் கடந்த 2 மாதங்களாக மண்எண்ணெய் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் கேட்ட பின்னர், நேற்று காலை மண்எண்ணெய் வழங்கப்பட்டது. அப்போது பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட மண்எண்ணெய்யில் தண்ணீர் கலந்திருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கேட்டதற்கு, விற்பனையாளர் பதில் சொல்ல மறுத்து விட்டார்.

இதனால் மாங்குளத்தை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் மண்எண்ணெய் வாங்காமல் திரும்பி சென்றனர். சிலர் வேறு வழியின்றி தண்ணீர் கலந்த மண்எண்ணையை வாங்கி சென்றனர். இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலரிடம் கேட்டபோது, தண்ணீர் கலந்த மண்எண்ணெய் குறித்து புகார் எதுவும் வரவில்லை. விசாரிக்கிறேன் என்றார்.

பொதுமக்கள் வாங்கும் அரிசி, பருப்பில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மண்எண்ணெய்யிலும் கலப்படம் செய்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனவே மாவட்ட வழங்கல் அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News