செய்திகள்

மீரா குமாருக்கு நிதீஷ் குமார், அ.தி.மு.க. ஆதரவு அளிக்க வேண்டும்: திருமாவளவன்

Published On 2017-06-27 15:53 IST   |   Update On 2017-06-27 15:53:00 IST
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமாருக்கு நிதீஷ் குமார் மற்றும் அ.தி.மு.க.வினர் ஆதரவு அளிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நடிகர் நெப்போலியன், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. கே.எஸ்.அழகிரி, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சுபவீரபாண்டியன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த 23-ந் தேதி பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கணேஷ் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.கே.எஸ்.அழகிரி, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் சுபவீரபாண்டியன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் நெப்போலியன் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இவர்களது தரப்பில் அவர்களது வக்கீல்கள் ஆஜராகினர்.

திருமாவளவனும், நெப்போலியனும் கோர்ட்டில் ஆஜராக முடியாதது குறித்து அவரது வக்கீல்கள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இவர்களது மனுவை நீதிபதி கணேஷ் தள்ளுபடி செய்தார்.

மேலும் கோர்ட்டில் ஆஜராகாத திருமாவளவன் மற்றும் நெப்போலியன் ஆகியோருக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தார்.

இந்தநிலையில் இன்று காலை 10 மணியளவில் பண்ருட்டி கோர்ட்டில் திருமாவளவன் ஆஜரானார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை நீதிபதி கணேஷ் வருகிற 1-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசின் குழப்பமான நிலைப்பாட்டால் மாணவர்கள் மருத்துவம் படிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிளஸ்-2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.


நீட் தேர்வை தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்துக்கு தாமாக முன்வந்து அ.தி.மு.க.ஆதரவு அளித்துள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்துக்கும், எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமாருக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளது.

ராம்நாத் கோவிந்து ஆர்.எஸ்.எஸ்.தொண்டர் ஆனால் மீராகுமார் ஜனநாயக சிந்தனையாளர் எனவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மீரா குமாருக்கு நித்தீஷ் குமார் மற்றும் அ.தி.மு.க. ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கல்வியை காவிய மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தியை எந்தவகையில் கொண்டுவந்தாலும் அதை எதிர்ப்போம்.

முன்னாள் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டது சட்டத்துக்கு புறம்பானது. அவரை விசாரிக்காமலேயே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தமிழக கவர்னர், ஜனாதிபதி ஆகியோர் தலையிட்டு அவரை விடுதலை செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News