செய்திகள்

ஈரோடு பெரியவலசில் டாஸ்மாக் மதுக்கடையை அடித்து நொருக்கிய பெண்கள்

Published On 2017-05-16 16:47 IST   |   Update On 2017-05-16 16:47:00 IST
ஈரோடு பெரியவலசில் டாஸ்மாக் மதுக்கடையை பெண்கள் அடித்து நொருக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு:

ஈரோடு பெரியவலசில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது. இந்த மதுக்கடையால் பெண்களுக்கும், மாணவ-மாணவிகளுக் கும் பாதிப்பு இருப்பதாக கூறி வந்த பெண்கள் அந்த மதுக்கடையை மூட அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தொடர்ந்து அந்த மதுக்கடை அதே இடத்தில் செயல்பட்டு வந்தது. இது அந்த பகுதி மக்களை ஆத்திரப்படுத்தியது. இன்று மூடப்படும், நாளை மூடப்படும் என்று காத்திருந்த அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. எனவே அவர்கள் இன்று திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

இன்று காலை சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் மதுக்கடை முன்பு திரண்டனர். மதுக்கடையை மூட வலியுறுத்தி கோஷமிட்டனர். மதுக்கடை மூடி இருந்ததால் திடீரென அவர்களது ஆத்திரம் மதுக்கடை கட்டிடம் மீது பாய்ந்தது.

கடை முன்பிருந்து ஷெட்டை அவர்கள் அடித்து உடைத்து நொருக்கினர். சிலர் அந்த பகுதியில் இருந்து சுவரை அப்படியே கீழே தள்ளி சேதப்படுத்தினர்.

குடிமகன் உட்கார்ந்து மது குடிக்க அங்கு ஏராளமான கற்கள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை பொதுமக்கள் பெயர்த்து எடுத்து வீசினர். ஒரு சிலர் அந்த மதுக்கடையின் பார் பகுதிக்கு சென்றனர். அங்கு கிடந்த சேர்களை தூக்கி வீசினர். அங்கு வைக்கப்பட்டு இருந்து வாட்டர் கேனை உடைத்தனர்.

பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சூளை பகுதிக்கு செல்லும் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரும் அங்கு வந்தார். அவர் போராட்டத்தில் ஈடு பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பா.ம.க.வை சேர்ந்த ஆறுமுகமும் மக்களிடம் பேசினார். மக்கள் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறப்பட்டது. இதனால் பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர்.

இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News