செய்திகள்

வேதாரண்யம் அருகே பொதுமக்கள் போராட்டத்தால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது

Published On 2017-05-09 17:54 IST   |   Update On 2017-05-09 17:54:00 IST
வேதாரண்யம் அருகே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மதுக்கடை மூடப்பட்டது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு சாலக்கடை கடை வீதியில் பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வந்தது.தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பல கடைகள் மூடப்பட்டதால் இந்த கடைக்கு நாள்தோறும் கூட்டம் அதிகமாக வந்தது.

இதனால் அங்குள்ள வர்த்தக நிறுவனம், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கடையை அகற்ற வேண்டும் என கடந்த மாதம் 2-ந் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது டாஸ்மாக் நிறுவனத்தினர் ஒரு மாதத்தில் கடையை எடுத்து விடுவதாக உறுதியளித்தனர். ஆனால் காலக்கெடு முடிந்தும் கடையை அகற்றாததால் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த வேதாரண்யம் டி.எஸ்.பி. பாலு பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் இளங்கோவன் முன்னிலையில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம் என பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் கடை மூடப்பட்டது. அதனை திறக்க வந்த டாஸ்மாக் ஊழியர்கள் திரும்பி சென்றனர். வேதாரண்யம் அன்னாப்பேட்டையில் பொது மக்கள் போராட்டம் காரணமாக கடை அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News