செய்திகள்

ராயவரம் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

Published On 2017-05-04 22:40 IST   |   Update On 2017-05-04 22:40:00 IST
ராயவரம் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ராயவரம்:

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், ராயவரத்தில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் பூச்சொரிதல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதையொட்டி காலையில் அரிமளம், ராயவரம், கே.புதுப்பட்டி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பின்னர் இரவு ராயவரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் வாகனங்கள் மற்றும் தட்டுகளில் பூக்களை வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் முத்துமாரியம்மன் பாதத்தில் பூக்களை கொட்டி வழிபட்டனர்.

இதில் அரிமளம், ராயவரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பூச்சொரிதலுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அரிமளம் போலீசார் செய்திருந்தனர்.

Similar News