செய்திகள்

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கட்டையால் அடித்து தாக்குதல் - 4 பேர் படுகாயம்

Published On 2017-05-04 01:14 IST   |   Update On 2017-05-04 01:14:00 IST
வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 4 மீனவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய எல்லைக்குட்பட்ட நடுக்கடலில் நேற்றிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை கட்டையால் அடித்து தாக்கி விரட்டியுள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் இந்த தாக்குதலில் வேதாரண்யத்தைச் சேர்ந்த மீனவர்கள் செந்தில், குமாரசாமி, அமுதகுமார், கலைமணி ஆகிய நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, கரை திரும்பிய நால்வரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் இந்தியா வந்திருந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்த கூடாது என்று இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், மோடி கோரிக்கை விடுத்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News