செய்திகள்

புதுக்கோட்டை அருகே மகனுடன் ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை

Published On 2017-04-29 10:21 IST   |   Update On 2017-04-29 10:21:00 IST
புதுக்கோட்டை அருகே மகனுடன் ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமயம்:

புதுக்கோட்டை அருகே மகனுடன் ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கொப்பரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 40). இவரது மனைவி இந்திராணி (36). இவர்களது மகன் லோகேஷ் (12).

சுந்தரராஜனுக்கும், இந்திராணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இந்திராணி கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இன்று காலை மகனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் திருமயம் ரெயில்வே தண்டவாளத்தில் இந்திராணி இறந்தநிலையிலும், லோகேஷ் மயக்கமடைந்த நிலையிலும் கிடந்தனர். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக புதுக்கோட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லோகேசை மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்திராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இந்திராணி எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக இந்திராணி தனது மகனுடன் இன்று காலை திருமயத்தில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதில் லோகேஷ் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பியுள்ளான். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News