செய்திகள்

டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

Published On 2017-04-27 20:34 IST   |   Update On 2017-04-27 20:34:00 IST
வடகாடு அருகே புள்ளான் விடுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடகாடு:

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து, நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த டாஸ்மாக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் வடகாடு அருகே புள்ளான் விடுதியில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்து மது குடித்து விட்டு செல்கின்றனர். மேலும் மது குடிப்பவர்கள் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டுவதால், அப்பகுதி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

இதனால் இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானவர்கள் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் போராட்டத்தில் கலந்து கொண்ட அப்பகுதியை சேர்ந்த தமிழரசி என்ற பெண் திடீரென மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன், தாசில்தார் ராஜேஸ்வரி, போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் முத்தலீப் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் டாஸ்மாக் கடையை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிகப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Similar News