செய்திகள்

அரியலூர் அருகே குடிநீர் பிரச்சினையை கண்டித்து செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்

Published On 2017-04-18 17:10 IST   |   Update On 2017-04-18 17:10:00 IST
அரியலூர் அருகே குடிநீர் பிரச்சினையை கண்டித்து விவசாயி செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலங்கச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டியன் (வயது 47), விவசாயி. இவர் இன்று காலை செந்துறை போலீஸ் நிலையம் அருகே உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

உடனே செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

அப்போது செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய வீரபாண்டியன், செந்துறை பகுதியில் சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. திட்டப்பணிகள் எதுவும் நடைபெறாமல் அனைத்தும் முடங்கி கிடக்கிறது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மேலே இருந்து குதித்து தற்கொலை செய்வேன் என்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் தொடர்ந்து அவரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இன்ஸ்பெக்டர் கருணாநிதி, அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனை ஏற்று வீரபாண்டியன் போராட்டத்தை கைவிட்டு மேலே இருந்து கீழே இறங்கினார்.

பின்னர் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News