செய்திகள்

செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சிறுவர்கள் மோதல்

Published On 2017-03-27 14:54 IST   |   Update On 2017-03-27 14:54:00 IST
செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சிறுவர்கள் 2 பிரிவாக பிரிந்து திடீரென மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் சமையல்காரர் வெள்ளியங்கிரி உள்பட 7 சிறுவர்கள் காயம் அடைந்தனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு டவுனில் சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளது. இங்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் 70 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று இரவு அவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. அப்போது சிறுவர்கள் 2 பிரிவாக பிரிந்து திடீரென மோதலில் ஈடுபட்டனர்.

இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். கற்களையும் வீசினார்கள். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சமையல்காரர் வெள்ளியங்கிரி சிறுவர்களை தடுக்க முயன்றார்.

ஆத்திரம் அடைந்த சிறுவர்கள் அவரையும் சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சத்தம் கேட்டு வந்த காவலர்கள் மோதலில் ஈடுபட்ட சிறுவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்களை தனித்தனி அறைகளில் அடைத்தனர்.

இந்த மோதலில் சமையல்காரர் வெள்ளியங்கிரி உள்பட 7 சிறுவர்கள் காயம் அடைந்தனர். வெள்ளியங்கிரிக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிறுவர்களின் கோஷ்டி மோதலுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இங்கு சிறுவர்களிடையே மோதல் ஏற்படுவதும், பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News