துரைப்பாக்கத்தில் போலீசார் விரட்டியபோது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி
திருவான்மியூர்:
துரைப்பாக்கம், கண்ணகி நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 4-வது மாடியில் வசித்து வந்தவர் மோவின் (வயது 35).
இவர் அதே பகுதியில் வசிக்கும் மோகனாவை தாக்கினார். இது குறித்து கண்ணகிநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதுபற்றி விசாரிப்பதற்காக மோவின் வீட்டிற்கு போலீசார் சென்றனர். போலீசாரை கண்டதும் பயந்து போன மோவின் 4-வது மாடியில் இருந்து தாவி குதித்தார்.
இதில் நிலை தடுமாறிய அவர் தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மோவின் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்,
இது குறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.